பகவான் ஸ்ரீ ரமணரிடம் போனால் , அமைதியாக இருக்கிறது. ஏதோ ஒரு நிம்மதி ஏற்படுகிறது. மலையைவிட்டுக் கீழே இறங்கினால் , பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. நோய் ஆட்டம் போடுகிறது. ஆனால் , அந்த இடத்தில் எதுவுமே இல்லையே , ஏன் அப்படி பசிகூட எடுக்கவில்லையே , ஏன் அப்படி ஆச்சரியமாக இருக்கும். அந்த மகான் மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும். தேடுதலின் விளைவாகக் காதல் அல்லது அன்பு ; அதன் பின்விளைவாக நம்பிக்கை ; மகான்களின் மீது நம்பிக்கை ஏற்பட , அவர்களின் உபதேசம் உள்ளுக்குள் மெல்ல மெல்ல இறங்கும். அவர் அண்மையில் இருந்தது , அவரின் அதிர்வைப் பெற்றது , அவர் தொடலில் ஆனந்தம் கண்டது , அவர் பார்வையில் உள்ளுக்குள் திரும்பியது என்றெல்லாம் நடக்க , மனம் உள்நோக்கி நிற்க , ஓர் அமைதி ஏற்படும்.
இப்போது மனம் வெற்றி தோல்விகளைப் பற்றி குடும்பச் சூழல் பற்றி , தன் உடல் நிலை பற்றி , அடுத்தவரின் துரோகம் பற்றி , தனது அடுத்த நடவடிக்கை பற்றி எந்த கவலையும் படாது. ஆற்றில் போகும் சருகுகளில் , நானும் ஒரு சருகு. இத்தனை காலம் தாண்டி வந்திருக்கிறேன். இனி , சொச்ச காலமும் தானாகத் தாண்டும் என்ற எண்ணம் ஏற்பட , உள்ளே அமைதி கெட்டிப்படும். அந்த அமைதி , எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலைக்குக் கொண்டுபோய் , உள்ளுக்குள்ளே நான் யார் என்ற கேள்வியை பலமாக எழுப்பும். அப்போது அது வெறும் கேள்வியாக , தேடலாக இருக்காது. மிகச் சரியான பாதையில் முன்னேறி , எங்கு எண்ணங்கள் தோன்றுகின்றனவோ , எங்கு நான் என்கிற எண்ணம் மிக பலமாக இருக்கிறதோ , அந்த இடத்தைப் போய் ஆக்கிரமித்துக்கொள்ளும். இங்கிருந்துதானே எல்லாம் வருகிறது ; இங்கிருந்துதானே நான் என்ற எண்ணம் தோன்றுகிறது ; இங்கிருந்தானே என் செயல்களெல்லாம் வடிவு பெறுகின்றன என்று அந்த எண்ணத்தை முழுவதுமாகப் பற்றி நிற்க.. உள்ளே மெல்ல மெல்லப் பற்றி நின்றது , பற்றியதால் இழுக்கப்படும். பற்றியதும் பற்றப்பட்டதும் இரண்டறக் கலக்கும் இதைச் சொல்லால் விளக்க முடியாது. மிகப் பெரிய உண்மை. சத்தியம்.
இது கணிதம் அல்ல ; 16 நாட்கள் இந்தப் பயிற்சி , அடுத்த 16 நாட்கள் அந்தப் பயிற்சி என்கிற ஆட்டமெல்லாம் இங்கு கிடையாது. எந்தக் கணக்கு வழக்கிலும் இது அடங்காது. இது உங்கள் தலை எழுத்து. முன்ஜென்ம வினை. மூத்தோர் புண்ணியம் இவை கலந்து திரட்சியாகி உள்ளுக்குள்ளே இறங்கவேண்டும். அப்போதுதான் நான் யார் என்று தேடலை ஆரம்பிக்கவே முடியும். அப்படி ஆரம்பித்தவர்கள் , இது பற்றி தெளிவாகப் பேசுபவர்களிடம் போய் நிற்கிறார்கள் ; ஈர்க்கப்படுகிறார்கள். மகான்களிடம் சாதகர்கள் ஈர்க்கப்படுவது இவ்விதமே ! சாதகருடைய உண்மையான தேடலைப் பொறுத்து , மகான் அவருக்கு ஸ்பரிச தீட்சையோ , நயன தீட்சையோ அளிக்கிறார். மனிதர்களும் , பறவைகளும் , மிருகங்களும் அமைதியாக உலவும் அந்த மகானின் சந்நிதியில் , மனித மனம் அடங்குகிறது ; என்ன கேட்க வந்தோம் என்று தெரியாமல் சரி , என் துணை நீயே என்று கைகூப்பி முழுவதுமாக சரணாகதி அடைகிறது.
சரணாகதி என்பது கர்வம் அழித்தல் ; அகந்தை அகற்றுதல். அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளி வேடங்கள். அந்தத் துறவு காவி உடுத்தாது. தங்க ருத்ராட்சம் , வெள்ளியில் கோத்த துளசி மாலை , சிவப்பு கல் சுற்றி வைரம் பதித்த ப்ரேஸ்லட் , பொங்கும் முடி , கட்டைச் செருப்பு என்றெல்லாம் அணியாது. துறவு என்பது தோற்றமல்ல ; அது உள் நடப்பு. சொத்துக் குவிப்பு அல்ல ; எல்லாம் விட்ட சுகம் ; இடையறாத பரம சந்தோஷம் உள்ளே மிதந்துகொண்டிருக்கும் நிலை.
மகான்களின் தீண்டலால் உள்ளே பல கதவுகள் திறக்கும் ; உள்ளே பல இடங்களில் தீப்பற்றி எரியும். அடடே. இதுதான் விஷயமா ! என்று உண்மைகள் தெரிய வரும். இப்படித்தான் மரணம் நிகழப்போகிறதா , இங்கிருந்து இடம் மாறுவதுதானா , இந்த இடத்திலிருந்து நகருமோ , இதுதானா ! என்று மிகப் பெரிய விடையைத் தரும் ; பெரிய நிம்மதி ஏற்படும். தன்னை அறிந்தவருக்கு மரண பயம் இல்லை. அந்த விடுதலை அடைந்தவரின் முகம் , ஆனந்த பரவசத்தில் மின்னும். கண்களில் ஒளி மிகும். அவர்கள் தொடர்ந்து அந்த நிலையிலேயே இருப்பர். ஏதேனும் தொழில் செய்வர். இல்லறம் நடத்துவர். இல்லறமே இல்லாது தனியே திரிவர். பிச்சைக்காரனாக இருப்பர். பெரும் செல்வந்தராக இருப்பர். சமைத்துச் சாப்பிடுவர். சாப்பிடாமலும் இருப்பர். கிழிந்த உடையுடன் இருப்பர். சீராக உடுத்துவர். பேசுபவர்களாக இருப்பார்கள் ; பேசாதவர்களாகவும் இருப்பார்கள். எப்படியிருப்பினும் அந்த முகத்திலிருந்து. அந்த உடம்பிலிருந்து சத்தியம் மிக அற்புதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
புலி , புலிக்குட்டியை நக்கித்தான் புலியாக்கும். புலிக்குட்டி பெரிய புலியான பிறகு , இன்னொரு குட்டியைப் பேணத் துவங்கிவிடும். ஞானப் பரம்பரை இப்படித்தான் உருவாகும். உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் இந்த லட்சணம் வந்து விடாது. கோடியில் ஒருவருக்கே இந்த உத்தம ஞானம் கிடைக்கும் இது ஒரே ஜென்மத்தில் முடியும் விஷயம் அல்ல ; இந்த ஜென்மத்தில் உள்வாங்கி , உள்ளே உரமிட்டு வளர்த்து , இறந்த பிறகு , அடுத்த ஜென்மத்தில் பிறக்கும்போதே வீரியத்தோடு பிறப்பவர்கள் உண்டு. உள்ளே என்னது என்று புரிந்து மௌமாகி , தன் மௌனத்தை ஞானமாக மாற்றி , குடும்பத்தோடு ஒட்டி இருந்து , மடிந்து போவாரும் உண்டு. அப்பா இறந்து போனார் என்று மகன் சொல்வான். அப்பா ஞானியானார் என்பது சுற்றியுள்ளவருக்கே தெரியாமல் போகும்.
எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்களுடைய பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ( விகடன் வெளியீடு ) என்னும் நூலிலிருந்து.
from fb Ramana Mandiram